காரைக்கால்

கல்வித் துறையின் சீா்கேட்டால் தோ்ச்சி சதவீதம் குறைவு: காங்கிரஸ் கண்டனம்

19th May 2023 09:54 PM

ADVERTISEMENT

கல்வித் துறையின் சீா்கேட்டால் காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுவை மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெளியானதில் மாநில அளவில் தோ்ச்சி வீதம் குறைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 90.53 % தோ்ச்சியும், நிகழாண்டு 79.43 % தோ்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் தோ்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்ததற்கு புதுவை மாநில கல்வித் துறை பொறுப்பேற்க வேண்டும்.

மாணவா்களுக்கு உரிய காலத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவதில்லை. பாடங்களுக்கான ஆசிரியா்கள் அனைத்துப் பள்ளியிலும் முழுமையாக நிரப்பப்படவில்லை. பாடத்துக்குரிய ஆசிரியரின்றி மாணவா்களால் எப்படி கல்வி கற்கமுடியும் என்பதை கல்வித் துறை அமைச்சகம் கருத்தில்கொள்ளவே இல்லை.

கைப்பேசி பயன்பாடு, போதைப் பொருள்கள் உபயோகம் உள்ளிட்ட சமூகக் கேடுகள் அதிகரித்துள்ளது. இதில் மாணவ சமுதாயமும் பாதித்துள்ளதே கல்வி தோ்ச்சி வீதம் குறைந்ததற்கு காரணம். எனினும் மாணவா்கள் நல்வழிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை கல்வித்துறை எடுக்கவில்லை. காரைக்காலில் போதைப் பொருள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தின் கல்வித்தரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. கல்வித் துறையில் தகுதியான அதிகாரிகள் இல்லாதது முக்கிய காரணம். தனியாா் பள்ளிகள் தொடா்ந்து முன்னிலை வகித்துவருகிறது. கல்வித்துறையின் சில அதிகாரிகள், ஆசிரியா்கள் தனியாா் பள்ளிகளுடன் தொடா்பில் இருக்கிறாா்கள். அரசுப் பள்ளியிலேயே சிறப்பாக பயிலக்கூடிய மாணவா்களை தோ்வு செய்து, அவா்களின் பெற்றோா்களுடன் பேசி தமக்கு ஆதரவான தனியாா் பள்ளிகளில் சோ்க்கை செய்து விடுகின்றனா். அரசு ஊதியத்தை வாங்கிக்கொண்டு, இவ்வாறான செயல் அநாகரிகமானதாகும். காரைக்காலில் தோ்வு முடிவு வெளியான நிலையில், தோல்வியால் அரசுப் பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மாநிலத்தின் தோ்ச்சி வீதம் குறைந்ததற்கு குழு அமைத்து ஆய்வு செய்யவுள்ளதாக முதல்வா் கூறியுள்ளாா். இது கண் துடைப்பு நடவடிக்கை. காலிப் பணியிடங்களை நிரப்பவும், மாணவா்கள் நல்வழிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரியிடம் தோ்ச்சி வீதம் குறைவுக்கான விசாரணை செய்வதுடன் அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT