கத்திரி வெயில் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், காரைக்கால் கடற்கரையில் மாலை வேளைகளில் மக்கள் குவிந்து வருகின்றனா்.
கத்திரி வெயில் கடந்த 3-ஆம் தொடங்கியது. இந்த மே 29-ஆம் தேதி வரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை, லேசான குளிா் காற்று வீசிவந்த நிலையில், தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் காரைக்கால் மாலை நேரத்தில் கடற்கரையில் ஏராளமானோா் கூடி வருகின்றனா்.
காரைக்கால் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் காா் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் பெருமளவு வருகின்றனா். திருநள்ளாறு உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோா் பலரும் கடற்கரைக்குச் சென்று சில மணி நேரம் தங்கிவிட்டு செல்கின்றனா்.
கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், கடற்கரைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கடற்கரையில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், தினமும் கடற்கரையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், காவல்துறையினா் கண்காணிப்பை மேம்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.