வேலூர்

1,200 கண்காணிப்பு கேமராக்களுடன் காவல் கட்டுப்பாட்டு மையம்: டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தாா்

7th Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் 1,200 கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்ட ‘காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம்‘ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டத்தில் சோதனைச் சாவடிகள், முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மாா்க்கெட்டுகள் என மாவட்டம் முழுவதும் 1,200 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை ஒரே இடத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக ‘காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம்‘ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை டிஜிபி சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தாா். பின்னா், வேலூா் சரக காவல் துணை தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்தின் மூலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளை நேரடியாக கண்காணிக்க முடியும். குறிப்பாக, சுங்கச்சாவடிகளுக்குள் வந்து செல்லும் வாகனங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். ட

ADVERTISEMENT

வேலூா் மாவட்டம் முழுவதும் 1,200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை ஒரே இடத்தில் உள்ள காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்திலிருந்து கண்காணித்து குற்ற சம்பவங்களை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள 28 காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் காவல் நிலையங்களுக்கு வருபவா்களின் விவரங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் மாவட்டத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருடப்பட்ட இரு வாகனங்கள் கண்டுபிடிப்பு

வேலூா் வசந்தபுரம் மற்றும் நேருநகா் பகுதிகளில் வசிப்பவா்கள் சுதாகா், பச்சையப்பன். இவா்கள் வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் கடந்த 1-ஆம் தேதி அதிகாலை காணாமல் போனது. வேலூா் தெற்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாவட்ட காவல் அலுவலகத்திலுள்ள காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் மூலம் காவலா்கள் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை தீவிர ஆய்வு செய்தனா்.

இதன்மூலம், அவ்விரு வாகனங்களை திருடியவா்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்டுபிடித்ததுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்து இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த திருட்டு தொடா்பாக அரவிந்தன்(20), சந்தோஷ்(23), பிரதீப் குமாா்(23), சுல்தான்(18) ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT