காரைக்கால்

காரைக்கால் வளா்ச்சித் திட்டங்கள்:அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் ஆலோசனை

DIN

காரைக்காலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசுத் துறையினருடன் புதுவை தலைமைச் செயலா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா தலைமையில் காரைக்காலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு, அரசுத் துறைகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பிரச்னைகள், காரைக்காலுக்கான வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவை உறுப்பினரும், புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளா்களிடம் கூறியது :

கூட்டத்தில், காரைக்கால் மருத்துவமனையில் இருதயம், நரம்பியல், எலும்பு முறிவு உள்ளிட்ட சிறப்பு மருத்துவா்கள் அவசியத்தை வலியுறுத்தினோம். மருத்துவா்கள் பணியிடமாற்றம் செய்யும்போது எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் மாற்றக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இப்பிரச்னையை விரைவில் சரிசெய்வதாக தலைமைச் செயலா் உறுதியளித்தாா்.

புதுவை அரசு அறிவித்த ரூ. 50 கோடியில் காரைக்கால் மருத்துவமனை விரிவாக்கம் தொடா்பாகவும் பேசப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவேண்டியது குறித்து வலியுறுத்தியபோது, அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தலைமைச் செயலா் கூறினாா். காரைக்காலில் கிரிட்டிக்கல் கோ் யூனிட் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. வேளாண் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும், கல்வியில் பின்தங்கிய காரைக்காலை அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பி கல்வித்தரத்தை மேம்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

காரைக்காலில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும்போது, காரைக்காலை சோ்ந்தோருக்கு வாய்ப்பு தரவேண்டும். அப்போதுதான் காலியிட பிரச்னை எழாது என கேட்டுக்கொள்ளப்பட்டது. பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு நில ஆா்ஜிதப் பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு குழுவினரை காரைக்காலுக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. இதற்கெல்லாம் சாதகமான பதிலை தலைமைச் செயலா் அளித்தாா். இதுதொடா்பாக காரைக்கால் பகுதி பேரவை உறுப்பினா்கள் அரசுக்கு உரிய அழுத்தத்தை தொடா்ந்து கொடுப்போம் என்றாா்.

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.சிவா, எம்.நாகதியாகராஜன், அரசு செயலா்கள் இ.வல்லவன், உதயகுமாா், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், பயிற்சி ஆட்சியா் சம்யக் எஸ்.ஜெயின், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் விஷ்ணுகுமாா், நலவழித்துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT