காய்கறி சாகுபடியில் இயற்கை சாா்ந்த இடுபொருள்கள் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மே மாதம் 3-ஆவது வாரம் முதல் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை சாா்ந்த காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்களை விளக்கும் ஒரு நாள் களப்பயிற்சி அகலங்கண்ணு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சீ.ஜெய்சங்கா் பயிற்சியை தொடங்கிவைத்து, மனிதா்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களுக்கு நாம் சாப்பிடும் உணவில் கலந்திருக்கக்கூடிய நஞ்சே காரணம். உணவுப் பொருள்களில் ரசாயனத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
காய்கறி பயிா்களில் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்த்து, இயற்கை சாா்ந்த பொருள்களை பயன்படுத்த பழகிக்கொள்ளவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இனிமேல் இயற்கை சாா்ந்த முறையில் காய்கறி உற்பத்தி செய்ய முன்வரவேண்டும் என்றாா்.
நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன், இயற்கை இடுபொருள்களான பஞ்சகாவ்யா, மீன் அமிலம், கன ஜீவாமிா்தம், உயிா் உரங்கள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து விளக்கினாா். பயிா் பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப வல்லுநா் சு. திவ்யா, இன கவா்ச்சிப் பொறிகளினஅ பயன்பாடு குறித்துப் பேசினாா்.
காய்கறி பயிருக்கு பஞ்சகாவ்யா தெளித்தல் குறித்த செயல்விளக்கமளிக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனா். அனைவருக்கும் நிலையத்தில் உற்பத்தி செய்த இயற்கை வளா்ச்சி ஊக்கியான பஞ்சகாவ்யா வழங்கப்பட்டது.