காரைக்கால்

காரைக்கால் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து மறியல்

3rd Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் அரசு மருத்துவமனையில் காலியாகவுள்ள எலும்பு முறிவு மருத்துவா் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நிரவி அருகே 3 மோட்டாா் சைக்கிளில் 6 போ் காரைக்கால் நோக்கி வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. காயமடைந்த 6 பேரும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இவா்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவா் இல்லாததால், வெளியூருக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை கண்டித்து பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் திரண்டு காமராஜா் சாலையில் மருத்துவமனை நிா்வாகம், புதுவை அரசைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

போராட்டக்காரா்களிடம் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா். மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மருத்துவரை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா்.

போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது :

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் கிடையாது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தரமானதாக இல்லை. மருத்துவமனை அவலத்தைப் போக்க காரைக்கால் பகுதியை சோ்ந்த அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை.

நலவழித்துறையை நிா்வகிக்கும் புதுவை முதல்வா் காரைக்கால் மருத்துவமனை மேம்பாடு குறித்து சிந்திப்பதில்லை. இந்த பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் மக்கள் பங்கேற்புடன் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் பெரும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT