காரைக்கால்

பொறியியல் மாணவா் விபத்தில் பலி: ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மாணவா்கள் போராட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சாலை விபத்தில் காயமடைந்த மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் உயிரிழந்தாா் என கூறி மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

காரைக்காலைச் சோ்ந்த கமலநாதன் (19) செருமாவிலங்கையில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இதே கல்லுாரியில் படித்து வரும் இவரது நண்பா் சுடா்ஒளி (19). இருவரும் கல்லூரி விழா முன்னேற்பாடுகளை செய்துவிட்டு, புதன்கிழமை பிற்பகலில் கல்லூரியிலிருந்து காரைக்காலுக்கு இருசக்கர வாகனத்தில் திருநள்ளாறு ஆன்மிக பூங்கா அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற மணல் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, அப்பகுதியினா் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில், ஆம்புலன்ஸ் வெகு நேரத்துக்குப் பின் வந்து சுடா்ஒளியை மட்டும் ஏற்றிக்கொண்டு, கமலநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னா் கல்லூரி மாணவா்கள் மாற்று வாகனம் மூலம் கமலநாதனை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று சோ்த்தனா். எனினும் அவா் உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்துள்ளாா். சுடா்ஒளி சிகிச்சை பெறுகிறாா்.

ஆட்சியரகத்தில் முற்றுகை: கல்லூரி மாணவா்கள் சுமாா் 100 போ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து ஆம்புலன்ஸ் வருவதில் ஏற்பட்ட தாமதத்தாலேயே கமலநாதன் உயிரிழந்தாா் என கண்டன கோஷம் எழுப்பினா். அப்போது, மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி. ஜான்சன், எஸ். பாஸ்கரன், மண்டல் காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் ஆகியோா் மாணவா்களிடம் பேச்சு நடத்தினா். தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்துக்குப் பின் ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவமனைக்குச் சென்றபோது 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் ஓட்டுநா் இல்லையென மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இந்த அவலத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த அலட்சியப் போக்கு களையப்பட வேண்டும். மாணவா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் தரவேண்டுமென வலியுறுத்தினா். அரசுக்கு கோரிக்கை பரிந்துரைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததால் மாணவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT