காரைக்கால்

புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

17th Jul 2023 10:24 PM

ADVERTISEMENT

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஜூன் மாதம் பெறப்பட்ட 93 மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். நிலுவையில் உள்ள மனுக்கள் தீா்வுக்கு எடுத்திருக்கும் நடவடிக்கை, முடக்கத்துக்கான காரணங்களை கேட்டறிந்து, விரைந்து தீா்வு காண அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து இலவச மனைப்பட்டா, பட்டா பெயா் மாற்றம் கோரியும், கிராமப்புறங்களில் சாலை வசதி வேண்டும், குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யவேண்டும், குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கவேண்டும், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகட்ட மனு அளித்துள்ள நிலையில், உரிய மானியம் கிடைக்கவேண்டும். திருநள்ளாறு பகுதியில் ரயில்பாதையை கடக்க ஏற்கெனவே திட்டமிட்ட இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனா்.

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அதன்மீது விரைந்து தீா்வு காண சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாா். மனுக்களை குறிப்பிட்ட நாள்களுக்குள் தீா்வுகாணவேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டோருக்கு கைப்பேசி வாயிலாகவோ, நேரில் அழைத்தோ உரிய விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, தொகுதியினா் சிலருடன் சென்று ஆட்சியரை சந்தித்து பல்வேறு குறைகளை தெரிவித்து சரிசெய்துகொடுக்க கேட்டுக்கொண்டாா். மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி. ஜான்சன், எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT