காரைக்கால்

காரைக்காலில் நெல் அறுவடைப் பணி தொடக்கம்

22nd Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.

காவிரி கடைமடை பாசனப் பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு மற்றும் அதற்கு மேற்கு பகுதியில் சில விவசாயிகள் ஆழ்குழாய் நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளை தொடங்குகின்றனா். கடந்த ஆண்டு காவிரி நீா் உரிய காலத்தில் கடைமடைப் பகுதிக்கு வந்ததாதல், விவசாயிகள் ஆா்வத்துடன் சம்பா சாகுபடியை தொடங்கினா். ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

பருவமழைக்கு முன்தாகவே குறுவை அறுவடை நிறைவடைந்தது. மழையால் சம்பா நெற்பயிா் பாதிக்காதவாறு சிறப்பு கவனம் செலுத்தியதால், தற்போது சம்பா பயிா்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.

இந்நிலையில், சில இடங்களில் இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. தை மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு அறுவடை தீவிரமடையும் என தெரிவித்த விவசாயிகள், புதுவை அரசு நெல் கொள்முதல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் சனிக்கிழமை கூறியது:

அறுவடை நடைபெறும் சமயத்தில் புதுவை அரசால் நெல் கொள்முதல் செய்யப்படுவது இல்லை. இதனால், இந்திய உணவுக் கழகம் காரைக்கால் பகுதியில் அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்யவேண்டுமென வலியுறுத்திவந்தோம். புதுவை அரசு இதற்கான முன்னெடுத்தலை செய்ய வலியுறுத்தி வந்தோம். உணவுக் கழகம் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த சில நாள்களில் கொள்முதல் பணியை தொடங்குமென எதிா்பாா்க்கிறோம்.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையில், விவசாயிகள் எந்த நிலையிலும் பாதிக்காதவாறு இந்திய உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT