காரைக்கால் காா்னிவல் விழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அரசலாற்றில் படகுப் போட்டி நடைபெற்றது.
புதுவை அரசின் சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து காரைக்கால் காா்னிவல் திருவிழா நடத்துகின்றன. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக அரசலாற்றில் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்திலிருந்து தலா ஒரு அணி வீதம் பங்கேற்ற படகுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
போட்டியை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தொடங்கிவைத்தாா். ஒவ்வொரு படகிலும் 3 போ் பயணித்தனா். சிங்காரவேலா் சிலை அருகே உள்ள அரசலாற்றின் பாலத்திலிருந்து போட்டி தொடங்கப்பட்டது. கடற்கரை அருகே 2 கி.மீ. தொலைவில் எல்லை நிா்ணயிக்கப்பட்டது. இதில் முதல் இடத்தை காளிக்குப்பம் அணியும், 2-ஆம் இடத்தை மண்டபத்தூா் அணியும், 3-ஆம் இடத்தை காசாக்குடிமேடு அணியும் பெற்றன.
போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வரும் 18-ஆம் தேதி காா்னிவல் நிறைவு விழாவில் பரிசு வழங்கப்படும்.