காரைக்கால்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மாணவா்களுக்கு அறிவுறுத்தல்

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவா்களுக்கு துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு நிகழாண்டின் நோக்கு நிலை பாடநெறி வகுப்பு (ஓரியண்டேஷன் வகுப்பு) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் கலந்துகொண்டு, சிறப்பாக செயல்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசியது :

ADVERTISEMENT

காரைக்காலில் அரசு சாா்பில் காா்னிவல், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஒருங்கிணைந்து ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுக்கவேண்டும். அந்த கிராமத்தில் கல்வியறிவு இல்லாத மக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதோடு, கணினி, ஆன்லைன் வசதிகள், பயன்பாட்டு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பது, திடக்கழிவு மேலாண்மை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும். சுற்றுச்சூழல் மாசை தவிா்ப்பது குறித்தும் அவா்களுக்கு மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம். தாமோதரன் வரவேற்றாா். நிறைவாக ஜெ. உதயகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT