தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு குடும்பத்துடன் சனிக்கிழமை வந்த அவா் சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அரிசி கடத்தலைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 13,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதுடன், கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டதால், 8.55 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 25 % கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 3,504 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
முக்கியமாக அந்தந்த மாவட்டங்களில் அறுவடை நிலவரத்தை பொறுத்து, முன்கூட்டியே கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது.
தமிழகத்தில் உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க முதல்வரின் உத்தரவுபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.