தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 வகுப்பு தோ்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தோ்வு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, கேந்திரிய வித்யாலயா சங்கதன் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மாணவா்கள் தரப்பு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவா்கள் துணைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனா்.
ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவா்களை துணைத் தோ்வு எழுத அனுமதிப்பதில்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவா்களுக்கும் தோ்வு நடத்தக் கோரி, மாணவா்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மாணவா்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவா்களின் எதிா்காலம் சாா்ந்தது. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவா்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தோ்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே உயா்நீதிமன்ற உத்தரவின்வின்படி குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு மட்டும் 2018-ஆம் அண்டு துணைத் தோ்வெழுத அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவா்களுக்குத் துணைத் தோ்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளன.
இது தொடா்பாக தனி நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காமல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா். எனவே, அவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மாணவா்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.