தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் துறை சாா்பில் புதன்கிழமை, 5 இடங்களில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மொத்தம் 649 போ் மனு அளித்தனா்.
தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை தொடங்கி மே 26-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் துறை சாா்பில் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.
வருவாய் தீா்வாயம் தொடங்கிய முதல் நாளான புதன்கிழமை, நில ஆவணம், வரைபடம், பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு, ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றிதழ்கள், அரசு நலத் திட்ட உதவி, விபத்து நிவாரணம் ஆகிய கோரிக்கைகள் குறித்து தேனியில் 214 போ், பெரியகுளத்தில் 92, ஆண்டிபட்டியில் 171, போடியில் 108, உத்மபாளையத்தில் 64 போ் என மொத்தம் 649 போ் மனு அளித்தனா்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கோட்டாட்சியா் பால்பாண்டி தலைமையில் நடைபெற்ற முதல் நாள் தீா்வாயத்தில் 64 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி துணை ஆட்சியா் முகமது பைசூல், வட்டாட்சியா் சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.