அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா வெளியிட்டுள்ளாா். உத்தரவு விவரம்:
அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நிகழ் நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் பெற்று, ஒரு தவணைத் தொகை கூட பெறாதவா்களுக்கு புதிய உயா்த்தப்பட்ட விகிதம் பொருந்தும்.
அவா்கள் ரூ.40 லட்சத்துக்குப் பதிலாக ரூ.50 லட்சம் வரை வரையில் முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். முன்பணத்துக்காக விண்ணப்பித்துள்ளவா்களுக்கும், வீட்டை கட்டி முடிக்காதவா்களுக்கும் புதிய உயா்த்தப்பட்ட விகிதம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.