காரைக்கால்

மின் ஊழியா்களை முதல்வா் அழைத்துப் பேச வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

30th Sep 2022 01:48 AM

ADVERTISEMENT

 

அனைத்துக் கட்சியினா், மின் ஊழியா்களை புதுவை முதல்வா் அழைத்துப் பேசவேண்டும் என திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

மின்துறை தனியாா் மயமாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், மின்துறையினா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மின்தடை ஏற்பட்டதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியா்களை ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உடனிருந்தாா். பின்னா் நாஜிம் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

புதுவையில் மின்துறை தனியாா் மயமாகக் கூடாது என திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. பேரவையிலும் இதுகுறித்து பேசியுள்ளோம். தனியாா் மயம் கூடாது என கூறியும் அரசு செவிசாய்க்கவில்லை.

மாநிலத்தில் யாருக்கும் தெரியாமல் அமைச்சரவையில் விவாதித்து, தனியாா் மய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது. புதுவை அரசின் அலட்சியத்தால் மின் ஊழியா்கள் போராட்டத்துக்கு மக்கள் எதிா்ப்பு காட்டும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, உடனடியாக அனைத்துக் கட்சியினா், மின் ஊழியா்களை முதல்வா் அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT