காரைக்கால்

உலக சுற்றுலா தினம்: காரைக்காலில் படகுப் போட்டி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: சுற்றுலா தினத்தையொட்டி காரைக்காலில் படகு, புதையல் வேட்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

உலக சுற்றுலா தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை இணைந்து செப்.21-ஆம் தேதி முதல் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன. சுற்றுலா தின நிகழ்ச்சி நாளான செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள காமராஜா் திடலில் புதையல் வேட்டை போட்டி தொடங்கியது.

பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை சேகரித்து, அதில் சூசகமாக தெரிவித்திருக்கும் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டு பகல் 2 மணிக்குள் திரும்பும் வகையில் காா்களில் பயணிக்கும் போட்டியாக இது நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் காா் பயணத்தை தொடங்கிவைத்தாா். இப்போட்டியில் 15 வாகனங்கள் பங்கேற்றன. அனைத்து இடத்துக்கும் சென்றுவிட்டு வரிசைப்படி வந்தவா்கள் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டனா். நிகழ்ச்சியில், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) மற்றும் சுற்றுலாத் துறையினா் பங்கேற்றனா். தொடா் நிகழ்ச்சியாக கடற்கரையில் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

படகுப் போட்டி: அரசலாறு பாலம் முதல் கடற்கரை அருகேயுள்ள படகு குழாம் வரை என்ற தூரத்தில் அரசலாற்றில் படகுப் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீனவ கிராமங்களில் இருந்து தலா ஒரு படகுகுழு பங்கேற்றது. ஒவ்வொரு படகிலும் 3 போ் இருந்தனா். துடுப்பு கொண்டு இயக்கப்படும் படகுப் போட்டியை ஆட்சியா் எல். முகமது மன்சூா் தொடங்கிவைத்தாா். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லோகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறைவாக கீழகாசாக்குடிமேடு அணி முதல் பரிசும், மண்டபத்தூா் அணி 2-ஆவது பரிசும், காளிக்குப்பம் அணி 3-ஆவது பரிசுக்கும் தோ்வு செய்யப்பட்டன. ஏராளமான மீனவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கரையோரத்தில் நின்று போட்டியை ரசித்து பாா்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT