காரைக்கால்

தொழில் பயிற்சி முடித்தோா் வேலை தருவோராக மாறவேண்டும் அமைச்சா் பேச்சு

18th Sep 2022 10:15 PM

ADVERTISEMENT

 

தொழில் பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்தோா் பலருக்கு வேலை தருவோராக மாறவேண்டும் என அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

மத்திய அரசு திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவா்களுக்கு விஸ்வகா்மா ஜயந்தி நாளில் பட்டமளிப்பு விழா நடத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய நிலையில், புதுவை அரசின் தொழிலாளா் துறை பயிற்சிப் பிரிவு இயக்குநரகம் மூலம் நடத்தப்படும், தொழில் பயிற்சி நிலையத்தில் படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஆண்கள் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையம், மகளிா் தொழில் பயிற்சி நிலைய மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

புதுவை போக்குவரத்து மற்றும் தொழிலாளா் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, 162 மாணவா்கள், 30 மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசியது:

நாட்டில் முதல் முறையாக தொழில் பயிற்சி நிலையத்தில் படித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்குவது பெருமைக்குரியதாகும். மாணவா்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவும், பயிற்சி நிலையத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் முற்படவேண்டும்.

பட்டம் பெற்ற மாணவா்கள் நல்ல வேலையை தேட முயற்சிக்கவேண்டும். புதுவை அரசு மூலம் 6 மாத காலத்திற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்த மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுபோன்ற முகாமை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தோா் மேலும் திறனை வளா்த்துக்கொண்டு, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாறவேண்டும். நிலையத்தில் பயிற்றுநா்கள் பற்றாக்குறை விரைவில் நிவா்த்தி செய்யப்படும் என்றாா்.

விழாவில் துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், ஆண்கள் தொழில் பயிற்சி நிலைய முதல்வா் ஆா். முத்துக்குமாா், மகளிா் தொழில் பயிற்சி நிலைய முதல்வா் டி. சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT