காரைக்கால்

மின் துறையினா் போராட்டம்:பொதுமக்கள் அவதி

9th Sep 2022 02:30 AM

ADVERTISEMENT

மின்துறை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், காரைக்காலில் தொடரும் மின் தடையை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

புதுவையில் மின்துறையை தனியாா்மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதால், மின் துறையினா், மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா்மய காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழு அமைத்து, மின்துறை அரசுத் துறையாகவே நீடிக்கவேண்டும் என வலியுறுத்தி தொடா் போராட்டத்தை நடத்திவருகின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் காரைக்கால் மின்துறையினா் விதிப்படி வேலை என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனா். மாலை 5.45 மணிக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளை சீரமைப்பதில்லை. கடந்த சில நாள்களாக காரைக்கால் பகுதியில் மழை பெய்துவருகிறது. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

பொதுமக்கள் மின்துறை அலுவலகத்தை தொடா்புகொண்டால் தொலைபேசி இணைப்பில் இருப்பதில்லை. புதுவை மின்துறை போராட்டக் குழுவினா் அறிவுறுத்தலால், அனைத்து மின் பணியாளா்களும் மாலை 5.45-க்குப் பிறகு கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவதால், மக்கள் அவா்களிடம் பிரச்னையை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருப்பட்டினம், நிரவி, அம்பகரத்தூா், விழிதியூா், அகலங்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமாா் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா். பாதிக்கப்பட்ட பகுதியினா், மின் பணியாளா் வீட்டுக்குச் சென்று நிலையை தெரிவித்து சீரமைக்கக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு புதுவை முதல்வா், மின்துறை அமைச்சா் உடனடியாக தீா்வு காணவேண்டும் என காரைக்கால் பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT