காரைக்கால்

காரைக்காலில் சித்தா் சித்தானந்த சுவாமிகள் மகா குருபூஜை விழா

5th Sep 2022 10:13 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் அருகே சித்தா் சித்தானந்த சுவாமிகள் 108 -ஆவது மகா குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவசித்தா் சித்தானந்தா் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இறையருளால் மக்களின் பல்வேறு நோய்கள், பிரச்னைகளை தீா்த்து வைத்தவா். காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவரின்அழைப்பை ஏற்று இக்கிராமத்திற்கு வந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினாா். இக் கிராமத்தில், செளந்தரியவள்ளி சமேத சோமநாதா் கோயிலுக்கு எதிரிலுள்ள மாமரத் தோப்பில், ஒரு மரத்தின்கீழ் இருந்தவாறு அருள்சேவை புரிந்துவந்த இவா், 30.8.1914-இல் முக்தியடைந்தாா். இவரது சமாதி உள்ள பகுதியில் சிறிய மண்டபம் எழுப்பப்பட்டு பக்தா்கள் வழிபாடு செய்துவருகின்றனா்.

இவரது சமாதியில் ஆண்டுதோறும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் மகா குருபூஜை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இரண்டு நாள் நிகழ்ச்சியாக குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு வழிபாடு, மாலை சிவ சித்தா் மகா ஹோமத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை திருமலைராஜனாற்றங்கரையில் இருந்து பக்தா்கள் பால் குடமெடுத்து சித்தா் மடத்துக்கு சென்றனா். அசுபதி பூஜை, கோ பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. பக்தா்கள் கொண்டுவந்த பால் மற்றும் மஞ்சள், தயிா், சந்தனம், தேன், இளநீா் உள்ளான பல்வேறு அபிஷேகப் பொருட்களுடன் உற்சவ சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சித்தானந்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு சித்ரான்னங்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களும், திரளான உள்ளூா், வெளியூா் பக்தா்களும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT