காரைக்கால்

உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுதவி

7th Oct 2022 02:50 AM

ADVERTISEMENT

காரைக்காலில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுதவி அளிக்க ஆட்சியா் பரிந்துரைத்துள்ளாா்.

உணவுப் பதப்படுத்தும் சிறு, குறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் புதுவையில் பிப்டிக் அரசு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில், குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை, கடனுதவி கோரி அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பிப்டிக் பொது மேலாளா் ஆ. சுரேஷ்ராஜ், இந்தியன் வங்கி பொது முதுநிலை மேலாளா் சயாய பிராங்க், கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பின் பிப்டிக் மாநில நோடல் அதிகாரி ஜி. சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துடன் இணைந்து, பிரதமா் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை வகுத்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்த நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவி கோரி வரும் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், பெறப்பட்ட விண்ணப்பங்கள் காரைக்காலில் மாவட்ட அளவிலான குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, 30 குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்த, ஆட்சியரின் பரிந்துரைப்படி பல்வேறு வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பயனாளிகள் 35 சதவீத மானியத்துடன் நிறுவனங்களை மேம்படுத்த கடன் பெறமுடியும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT