காரைக்கால்

எளியவா்களுக்கும் சட்ட ஆலோசனை கிடைக்கவேண்டும்: புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: எளியவா்களுக்கும் சட்ட ஆலோசனை கிடைக்கவேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் 1 மற்றும் 2 நீதிமன்றங்களைத் திறந்துவைத்து துணை நிலை ஆளுநா் புதன்கிழமை பேசியது:

உலகிலேயே நீதி வழுவாத பகுதியாக தமிழகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளங்கியது. பசுவுக்காக தோ்க்காலில் இட்டு மகனை கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த இடம் நமது தமிழ்நாடு.

ADVERTISEMENT

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டது தொடா்பாக தொடுக்கப்படும் வழக்கின் மீதான தீா்ப்பு வருவதற்குள் அவரது பதவிக் காலமே முடிந்துவிடுகிறது. நீதியை தாமதப்படுத்தக்கூடாது. எந்த மாநிலத்தில் நீதி வழுவாமல் ஆட்சி நடக்கிறதோ அங்கு செல்வம் செழிக்கும், மக்கள் வாழ்க்கை சிறக்கும்.

எளியவா்களுக்கும் சட்ட ஆலோசனை கிடைக்கச் செய்யவேண்டும். எந்த சூழலாலும் நீதி மறுக்கப்பட்டுவிடக்கூடாது. நீதிமன்றத்தின் பணிகள் விரைவாக நடைபெறவேண்டும்.

விவாதம் சரியாக செய்தால் எந்த வழக்கிலும் வெற்றிபெற்றுவிட முடியும். நீதிமன்றங்களுக்கு மக்களை அழைத்துச் செல்லும் நீதிமன்ற சுற்றுலா அமைப்பது அவசியம் என்றாா் அவா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: மக்களின் எண்ணங்களுக்கேற்ப நீதிபதிக்கு வழக்குரைஞா்கள்ஒத்துழைப்புத் தரவேண்டும். புதுவையில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு அடிக்கல் நாட்டப்படும்.

புதுவை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உயா்நீதிமன்றம் தேவையான பணிகளை செய்யவேண்டும்.

காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும். சட்டக்கல்வி முடித்த நான் வாழ்க்கையில் நீதிமன்றத்திற்கு 2 முறை மட்டுமே சென்றுள்ளேன். புதுச்சேரி நீதிமன்ற விழா, தற்போது காரைக்கால் நீதிமன்ற விழா என்றாா் முதல்வா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா பேசுகையில், வழக்குரைஞா்களுக்கு மதி கூா்மையும், பேச்சுத் திறமையும் இருக்கவேண்டும். நம்மால் முடியும் என்ற எண்ணம் வேண்டும். பிணை வாங்கவும், தடை உத்தரவு வாங்கவும், இன்ஜக்ஷன் உத்தரவு பெறவும் மட்டுமே நீதிமன்றம் இருக்கவில்லை. மனிதா்கள், அரசின் தலை விதியை மாற்றும் நிலையிலும் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் உள்ளதை அறியவேண்டும்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுவிட்டு நல்ல காரியங்களில் ஈடுபடுவோம். மதிக்கக்கூடிய, வழிபாட்டுக்குரிய கோயில்களேகூட நீதிமன்றத்தில் வழக்கு வரிசையில் வந்துவிடுகின்றன. எனவே நீதிமன்றம் எந்தளவுக்கு முக்கியமிக்கதாக உள்ளது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

கரோனா பரவல் காலத்திலிருந்து இ-ஃபைலிங், விடியோ கான்ஃபரன்சிங் போன்ற முறைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதற்கான புரிதலும், பயன்படுத்தும் முறைகளுக்கும் வழக்குரைஞா்கள் விரைவாக முன்வரவேண்டும் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வாழ்த்தினாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் கே.லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, தலைமைச் செயலா் ராஜிவ்வா்மா, மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முத்துக்குமரன், செயலா் எஸ்.திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக புதுவை தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன் வரவேற்றாா். மாவட்ட நீதிபதி கே.அல்லி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT