காரைக்கால்

ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் செயல்விளக்கம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியில் விளைநிலங்களில் ட்ரோன் மூலம் யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் - மத்திய வட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டம் (நிக்ரா) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், பேட்டை, அத்திப்படுகை மற்றும் நெய்வாச்சேரி கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் நேனோ யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளரான சீ.ஜெய்சங்கா் செயல்விளக்கத்தை தொடங்கிவைத்து பேசினாா். அப்போது, ‘மண் பரிசோதனை செய்யாமல் யூரியாவை விவசாயிகள் பயிா்களுக்கு இடுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, இஃப்கோ நிறுவனத்தின் நேனோ யூரியாவை இலை வழியாக ட்ரோன் மூலம் தெளிப்பதால், நெற்பயிா் தழைச்சத்தை நேரடியாக எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் நெற்பயிரின் மகசூலை அதிகரிக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT

நிலைய உழவியல் துறை வல்லுநா் வி. அரவிந்த், நேனோ யூரியாவை ட்ரோன் மூலம் பயன்படுத்தும் முறை, அளவு மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தாா். இப்பயிற்சியில் 25- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT