காரைக்கால்

துணைநிலை ஆளுநருக்கு மக்களின் பிரச்னைகள் தெரியவில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மக்களின் அடிப்படை பிரச்னைகளை பற்றி தெரியாதவராக உள்ளாா் புதுவை துணை நிலை ஆளுநா் என்று முன்னாள் அமைச்சரும், புதுவை மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

நியாயமான முறையில் பொருள்களை நுகா்வோருக்கு வழங்குவதும், நுகா்வோருக்கான அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வதும் குடிமை பொருள் வழங்கல் துறையின் இன்றியமையாத கடமையாகும்.

ஆனால், புதுவை மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு காரணம் முதல்வரோ, அமைச்சா்களோ அல்ல. மத்திய அரசால் அனுப்பப்படும் துணைநிலை ஆளுநா்கள்தான்.

ADVERTISEMENT

குறிப்பாக, முன்னாள் துணை நிலை ஆளுநா் கிரண்பேடியும், தற்போதைய துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனும் மக்களின் அடிப்படை பிரச்னைகளை அறியாதவா்கள் அல்லது அறிந்தும் மக்களுக்கு ஒவ்வாத மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரியை ஒரு சோதனை தளமாக பயன்படுத்தக் கூடியவா்கள். இதனாலேயே, குடிமைப் பொருள் வழங்கல் துறை வெகுவாக பாதித்துள்ளது.

மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சிவப்பு நிற அட்டை தகுதியானவா்களுக்கு கிடைப்பதில்லை. நியாயவிலைக் கடையில் தரப்படும் அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்தவா் அப்போதைய துணை நிலை ஆளுநா் கிரண்பேடி. இதனால், புதுவை மாநில மக்களுக்கு அரிசி கிடைக்காமல் போனது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநள்ளாறு தொகுதியில்100 பேருக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளை பாஜகவினா் மூலம் வழங்கியுள்ளனா். இதனால், வசதி படைத்த 50-க்கும் மேற்பட்டோா் இந்த அட்டைகளை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஏழை விவசாயிகள், கட்டடத் தொழிலாளா்கள், கூலித் தொழிலாளா்கள், ஓட்டுநா்கள், கூரை வீடுகளில் வசிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் சிவப்பு நிற குடும்ப அட்டை வேண்டி தலா ஆயிரம் விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. இவற்றை பரிசீலித்து, தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கவேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை செய்ய தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க காங்கிரஸ் கட்சி தயங்காது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT