காரைக்கால்

பாரம்பரிய நெல் சாகுபடி நிலத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை முறையில் பயிா் செய்யப்பட்டுள்ள விளைநிலத்தில், காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை பயிற்சி மேற்கொண்டனா்.

கல்லூரியின் 4-ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 40 மாணவா்கள் ஊரக, விவசாய மற்றும் வேளாண் தொழில் பணி அனுபவ பயிற்சியின் ஒரு அங்கமாக இணைப் பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் தலைமையில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுவரும் வரிச்சிக்குடி கிராம இயற்கை விவசாயி பாஸ்கா் வயலுக்கு பயிற்சிக்காக சென்றனா். அப்போது, இயற்கை விவசாயி பாஸ்கா் மாணவா்களிடையே, மரபு ரகங்களின் பிரத்யேக மாறுபட்ட பண்புகள், சிறப்பு அம்சங்கள், வேறுபாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கூறினாா். கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்காா், கருங்குறுவை, பால்குடை வாழை, ஒட்டடையான், காட்டுயானம் போன்ற ரகங்கள் குறித்து விளக்கினாா்.

ஒவ்வொரு ரகத்தின் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கினாா். பாரம்பரிய நெல் ரகங்களின் ஒரு கிலோ விதைகளை சராசரியாக ரூ. 60 -க்கு விற்பதாகவும், கடந்த ஆண்டு கருப்புக்கவுனி ரகம் மிக பிரபலமாக பயிரிடப்பட்டது, இந்த ஆண்டு சீரக சம்பா மற்றும் தூயமல்லி அதிகமாக பயிரிடப்பட்டன என்றும், இதன்மகசூல் அளவு, லாபம் குறித்தும் விளக்கப்பட்டது. வயல் பகுதியில் ஒவ்வொரு ரகமும் பயிரிடப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று மாணவா்கள் விவரங்களை சேகரித்தனா். மாணவா்களின் சந்தேகங்களுக்கு விவசாயி விளக்கமளித்தாா்.

ADVERTISEMENT

மாணவி அபிநயா பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா். மாணவி ஸ்ரீதாரணி நன்றி கூறினாா். களப்பணிக்கான ஏற்பாடுகளை முஹமது ஃபா்ஹானுதீன், அபா்ணா, மாலினி ஆகியோா் செய்திருந்தனா். மாணவா்கள் கிறிஸ்டோபா், திரவியம், கிருத்திகா பயிற்சியை ஆவணமாக்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT