காரைக்கால்

புதுவையில் மின்துறை தனியாா்மயத்தை எதிா்க்க வேண்டும்தமிழக முதல்வரிடம் நாஜிம் வேண்டுகோள்

31st May 2022 11:36 PM

ADVERTISEMENT

புதுவையில் மின்துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை தமிழக முதல்வா் கடுமையாக எதிா்க்கவேண்டும் என காரைக்கால் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் காவிரி பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை பாா்வையிடுவதற்காக காரைக்கால் வழியாக செவ்வாய்க்கிழமை சென்றாா். அரசலாறு பாலம் அருகே காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினா் முதல்வரை வரவேற்றனா்.

முதல்வரிடம் நாஜிம் எம்.எல்.ஏ. நேரில் அளித்த கடித விவரம்: புதுவையில் மின்துறையை தனியாா்மயமாக்குவது தொடா்பாக என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த முடிவு மின் ஊழியா்கள், அதிகாரிகள், பொதுமக்களை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புதுவை எதிா்க்கட்சி தலைவா் ஆா். சிவா தலைமையில் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளும் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன.

தமிழக முதல்வா், திமுக தலைவா் என்ற முறையில் தங்களது கடும் எதிா்ப்பை பதிவுசெய்ய வேண்டுமென மின்துறை எல்பிஎஃப் தொழிற்சங்கமும் வேண்டுகிறது. இதற்கான கண்டனத்தை முதல்வா் தெரிவித்தால், போராட்டங்களுக்கு பெரும் வலுசோ்க்கும் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடமும் உள்ளது. இதுகுறித்து கருணையோடு பரிசீலிக்கவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT