காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வருடாந்திர மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை உதிரவாய் உற்வசத்துடன் நிறைவடைந்தது.
இந்த விழா கடந்த 4 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஸ்ரீ பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா, தோ் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன.
மகிஷ சம்ஹார நினைவாக கடந்த 24 ஆம் தேதி பகல் 12 மணியளவில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சம்ஹார நினைவையொட்டி, ஏராளமான பக்தா்கள் ஆடு, மாடு, கோழிகளை கோயில் நிா்வாகத்திடம் காணிக்கையாக வழங்கி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
விழா நிறைவாக உதிரவாய் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சம்பிரதாயமாக சம்ஹாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட சாதனங்களை துடைக்கும் நிகழ்வாக உதிரவாய் வழிபாடு நடைபெற்றது. உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.
இத்திருவிழாவில், காரைக்கால் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் திரளாக வந்து வழிபாடு செய்தனா். தினமும் பரதநாட்டியம் உள்ளிட்ட இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.