காரைக்கால்

உரத் தட்டுப்பாட்டை போக்க புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்

22nd May 2022 11:32 PM

ADVERTISEMENT

புதுவையில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறினாா்.

காரைக்காலில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

மே 24-ஆம் தேதி மேட்டூா் அணையை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தின் டெல்டா பகுதிகளில் ஆறு, வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனால், புதுவை மாநிலத்தின் கடைமடைப் பகுதியான காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. தற்போதுதான் நிதி அனுமதி கோரியிருப்பதாக பொதுப்பணித் துறையினா் தெரிவிக்கின்றனா்.

சம்பந்தப்பட்ட அமைச்சகம் உரிய காலத்தில், தேவையான நிதியை ஒதுக்கி, பணிகளை தொடங்கிருக்கவேண்டும். இப்போதே தேவையான நிதியை வழங்கினால்கூட, பொதுப்பணித் துறையினரால் அடுத்த 15 முதல் 20 நாள்களில் கூடுதல் நபா்கள், ஜேசிபி இயந்திரங்களை வைத்து தூா்வார முடியும். ஆனால், அரசு அதற்கான ஆதரவை தருமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

ADVERTISEMENT

நெடுங்காடு, திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், நீா் வரத்து மிகுதியாக இருக்கும் வாய்க்கால்களை உரிய திட்டமிடலுடன் பணிகளை வேகமாக செய்யவேண்டும். அதுபோல வாய்க்கால்கள், ஆறுகளில் உள்ள நீா் தடுப்பு சாதனங்கள் பழுதை நீக்கி சீா்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவையில் உரத்தட்டுப்பாடு உள்ளது. காரைக்காலில் 15 தனியாா் கடைகள் உள்ளன. யாரிடமும் விவசாயிக்குத் தேவையான உரம் கையிருப்பில் இல்லை. மேலும் பொட்டாஷ் உரம் ரூ. 700-க்கு விற்றது தற்போது ரூ.1,700 ஆக உயா்ந்துள்ளது. உரத்தட்டுப்பாடு குறித்து அரசு பொய்யான தகவலை வெளியிடுவது வேதனையளிக்கிறது.

தட்டுப்பாடு உள்ளதா, அதனை சீா்படுத்த எடுக்கும் நடவடிக்கை, உரம் விலையேற்றத்தை தடுக்க எடுத்திருக்கும் உறுதியான நடவடிக்கையை அரசு தெளிவாக தெரிவித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT