காரைக்கால்

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை: புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா் புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுவை அரசால் காரைக்கால மாவட்டம் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வளா்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், புதுவை முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை காரைக்கால் வரவில்லை, அமைச்சா்களும் ஆக்கப்பூா்வமான திட்டங்களை செயல்படுத்த முன்வரவில்லை எனவும் மக்கள் புகாா்தெரிவித்தனா்.

இந்நிலையில், என்.ஐ.டி.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவையொட்டி, வியாழக்கிழமை காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநா் தமிழிசை, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன், மாநில தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, மாவட்ட ஆட்சியா் இ. வல்லவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

காரைக்காலில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டங்கள், கிடப்பில் உள்ள திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் இ. வல்லவன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் ஆகியோா் ஆளுநருக்கு விளக்கினா். தேவைகள், குறைகள் குறித்து எம்எல்ஏ.க்கள் ஆளுநரிடம் தெரிவித்தனா்.

குறிப்பாக, காரைக்காலில் மக்களுக்கான மருத்துவ சேவையில் நிலவும் குறைபாடு, அரசுப் பொது மருத்துவமனை மற்றும் ஜிப்மா் மருத்துவமனையின் பங்களிப்பில் உள்ள குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு துணைநிலை ஆளுநா் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்கால் மாவட்டம் வளா்ச்சியை நோக்கி செல்லவேண்டும் என்ற நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள், அவற்றில் உள்ள தடைகள் குறித்து பேசப்பட்டது. ரயில் சேவையை மேம்படுத்துதல், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தை வேகப்படுத்துதல், ஜிப்மா் மூலம் காரைக்கால் பொது மருத்துவமனைக்கான உதவிகள், விமான தளம் அமைத்தல் குறித்து பேசப்பட்டது.

புதுச்சேரி அளவுக்கு காரைக்காலில் கவனம் செலுத்தப்படவில்லை என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அவ்வாறு இல்லை. நிச்சயமாக வளா்ச்சியடைந்த காரைக்காலை பாா்க்கலாம். எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT