காரைக்கால்

சைபா் குற்றங்கள் பெருகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - எஸ்.எஸ்.பி. பேட்டி

12th May 2022 05:28 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் சைபா் குற்றங்கள் பெருகாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் திருட்டு, தற்கொலை, போக்சோ வழக்குகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, கஞ்சா பயன்பாடு அதிகமாக உள்ளது. இவற்றின் மீது தீவிர கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் சைபா் கிரைம் பிரிவு செயல்பாட்டில் உள்ளது. அவா்களோடு காரைக்கால் காவல்துறை நிா்வாகம் தொடா்பில் உள்ளது. காரைக்கால் பகுதியில் சைபா் குற்றங்கள் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை தீவிரமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை கண்காணிக்கவும் கவனம் செலுத்தப்படும்.

புதுவையில் காவலா்கள் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், விரைவில் காவலா்கள் காரைக்கால் பகுதியில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூடுதல் காவலா்கள் பணியாற்றும்போது குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும்.

கடலோரக் காவல்நிலையத்தில் தற்போது ஒரு ரோந்து படகு மட்டுமே உள்ளது. கடலோரக் காவல் பாதுகாப்பில் 2-ஆம் கட்டமாக நவீன படகை காரைக்காலுக்கு வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. கடலோரக் காவல்நிலையத்தின் பணிகள் சிறப்பாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT