காரைக்கால் மீனவா்கள் வலைகள், படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
ஏப்.15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்களின் இனப் பெருக்கக்காலமாக கருதி ஆழ்கடல் மீன்பிடிப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், குறுகிய தொலைவு சென்று மீன்பிடித்து வர தடையேதும் இல்லாததால் ஃபைபா் படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா்.
விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது படகுகள் மற்றும் வலைகளை மீனவா்கள் சீரமைத்து வருகின்றனா்.
காரைக்கால் மீனவா்கள் துறைமுக பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகளில் என்ஜின் பழுது நீக்குவது, படகு வா்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் வலைகளையும் சரிசெய்து வருகின்றனா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியது:
படகில் பழுது பாா்ப்பதற்கு படகு ஒன்றுக்கு ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக செலவாகிறது. ஆனால், புதுவை அரசு பழுது நீக்குவதற்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே தடைக்கால நிவாரணமாக வழங்கிவருகிறது. மீனவா்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு வழங்கிவரும் மானிய தொகையை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பத்துக்கு நிவாரணமாக அரசு ஆண்டுதோறும் வழங்கிவரும் தொகையை விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்றனா்.