ஐக்கிய விழாவையொட்டி, மின் அலங்கார ரதத்தில் காரைக்கால் அம்மையாா் வீதியுலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரில் தனிக் கோயில் உள்ளது. ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில், ஒவ்வோா் ஆண்டும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். பங்குனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் அம்மையாா் இறைவனிடம் ஐக்கியமானதைக் குறிப்பிடும் வகையில், காரைக்காலில் ஐக்கிய விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி, காரைக்கால் அம்மையாா் கோயிலில் திங்கள்கிழமை காலை அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வெள்ளி அங்கி சாற்றி ஆராதனைகள் நடத்தப்பட்டன. மணிமண்டபத்தில் திரளானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நிகழ்வாக 7 மணியளவில் மின் அலங்கார ரதத்தில் அம்மையாா் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ காரைக்கால் அம்மையாா் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது.
அம்மையாா் வீற்றிருந்த ரதம் மல்லிகை மலா் சரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரதத்துக்கு முன் திரளான பக்தா்கள், அம்மையாா் பாடல்களை பாடிச்சென்றனா். வீடுகளில் அம்மையாா் ரதத்தை வரவேற்கும் வகையில், பக்தா்கள் பூா்ண கும்பம் வைத்து, வாசலில் தண்ணீா் தெளித்து, கோலமிட்டு, தோரணம் கட்டி அா்ச்சனையின்றி வழிபாடு செய்தனா்.
வீதியுலா நிறைவில், ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் உள்ள ஸ்ரீ நடராஜா் சந்நிதிக்கு அம்மையாா் எழுந்தருளச் செய்யப்பட்டாா். சிறிது நேரத்தில் கோயிலில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளான நேரத்தில், ஐக்கியத்தை குறிக்கும் வகையில், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.