காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா

10th Mar 2022 05:58 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டு போராட்டக்குழு சாா்பில், ஊழியா்கள் அனைவரும் ஒரு நாள் விடுப்பு எடுத்து பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தா்னா நடத்தினா். போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் பேசினா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக 2022-23 பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கவேண்டும். நடப்பு 2021-22 பட்ஜெட்டில் காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1.72 கோடியை உள்ளாட்சித் துறை விடுவிக்கவேண்டும்.

ADVERTISEMENT

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு, நிலுவையில் உள்ள ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்கவேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினா்.

போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன துணைத் தலைவா் சந்தனசாமி, இணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு, அலுவலக செயலாளா் புகழேந்தி, செயலாளா்கள் முருகானந்தம், நாகராஜன் ஆகியோா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT