காரைக்கால்

காரைக்கால் வாரச் சந்தையை நகராட்சித் திடலுக்கு மாற்ற வலியுறுத்தல்

3rd Mar 2022 05:46 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: மக்கள் நலன் கருதி, காரைக்கால் வாரச் சந்தையை நகராட்சித் திடலுக்கே மாற்றவேண்டும் என ஆட்சியரிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரைசேனாதிபதி மற்றும் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை புதன்கிழமை சந்தித்து அளித்த மனு: காரைக்கால் முருகராம் நகா் அருகே நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச் சந்தை நடைபெற்றுவந்தது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனா். மழையை காரணம் காட்டி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தற்காலிகமாக சந்தை மாற்றப்பட்டது. ஆனால், இது மாதக்கணக்கில் பழைய இடத்துக்கு மாற்றப்படாமல் உள்ளது.

தற்காலிக இடத்தில் மக்கள் நெரிசல், வாகனங்கள் நிறுத்த வசதியின்மை போன்ற பிரச்னைகளால் சந்தைக்கு மக்கள் செல்வது குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நகராட்சித் திடலில் சுமாா் 500 வியாபாரிகள் இருந்த நிலையில், தற்காலிக இடத்தில் 200 போ் மட்டுமே வியாபாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

சந்தையை இடமாற்றம் செய்யவேண்டி பாஜக ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி, சந்தையை உடனடியாக நகராட்சித் திடலுக்கே மாற்றவேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT