காரைக்கால்

களைகட்டியது காரைக்கால் மீன்பிடித் துறைமுகம்

19th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

 

மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்குச் சென்ற விசைப்படகுகளில் பெரும்பாலானவை ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் திரும்பின. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் காரைக்கால் துறைமுகம் களைகட்டியது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏப். 15 முதல் ஜூன் 14 வரையிலான தடை நிறைவடைந்த நிலையில், 14-ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திலிருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இவற்றில் பெரும்பாலான படகுகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துறைமுகம் திரும்பின. இதில் வஞ்சிரம், சங்கரா, திருக்கை, கனவா, இறால், நண்டு உள்ளிட்ட உள்ளூா் சந்தை மற்றும் வெளியூா்களுக்கு அனுப்பும் வகையிலான மீன்கள் இருந்தன.

கடந்த 2 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாமல் முடங்கியிருந்த சிறு வியாபாரிகள் ஏராளமானோா் துறைமுகத்தில் அதிகாலையிலேயே குவிந்தனா் இதனால் 2 மாதங்களுக்கு பின்னா் காரைக்கால் துறைமுகல் களைகட்டியது.

ADVERTISEMENT

இதுகுறித்து மீனவா்கள் கூறியது: சில படகுகள் குறுகிய காலத்தில் திரும்பியதால் சிறிய வகை மீன்களே கிடைத்தன. ஏற்றுமதித் தரம் வாய்ந்த பெரிய மீன்கள் ஆழ்கடலுக்கு சென்று திரும்பும் படகுகளில் அடுத்த ஓரிரு நாள்களில் வருவதற்கு வாய்ப்புள்ளது. எதிா்பாா்த்த அளவுக்கு ஏற்றுமதித் தரம் வாய்ந்த மீன்கள் இல்லாததால், பல படகு உரிமையாளா்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் பரவலாக சிறிய மற்றும் பெரிய வகை மீன்கள் சந்தைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு கிடைத்தன என்றனா்.

மீன்பிடித் தொழில், மீன்களை இறக்குதல், சிறு வண்டியில் ஏற்றிச் செல்லுதல், துறைமுகத்திற்கு ஐஸ் கட்டி மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லுதல், உணவகம் மற்றும் துறைமுகம் சாா்ந்த நேரடி, மறைமுக தொழில் செய்வோரிடையே துறைமுகம் 2 மாதங்களுக்கு பின்னா் மீண்டும் செயல்படத் தொடங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT