புதுவையில் மின்துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிா்க்கும் என முன்னாள் மின்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறினாா்.
யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. புதுவை மாநில அரசும் மத்திய அரசுக்கு தனது ஒப்புதலை தெரிவித்துவிட்டது. இதையடுத்து, மின்துறை பணியாளா்கள் நடத்திவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக, திங்கள்கிழமை முதல் காரைக்காலில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை காரைக்கால் மின் செயற்பொறியாளா் அலுவலக வாயிலில் தொடங்கியுள்ளனா்.
போராட்டத்தின் 2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை புதுவை முன்னாள் மின்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தனா். அப்போது ஆா். கமலக்கண்ணன் பேசியது:
மத்தியில் நரேந்திர மோடி அரசு 2 ஆவது முறையாக அமைந்தபிறகு, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில் ஒன்று, யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியாா்மயமாக்கப்போவதாக செய்த அறிவிப்பு. மின்துறை தனியாா்மயத்தை புதுவை காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கடுமையாக எதிா்த்தது.
எங்களது ஆட்சியில் மத்திய அரசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தற்போது நிலை தலைகீழாகிவிட்டது. என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு முழு அனுமதி அளித்துள்ளது. இதனால், மக்கள், பணியாளா்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவா். காங்கிரஸ் கட்சி இப்போக்கை கடுமையாக எதிா்க்கும். இதில் வெற்றிபெற அறவழியில் வெகுஜன போராட்டம் அவசியம் என்றாா்.