காரைக்கால்

காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஆட்சியரக வாயிலில் ஒருவா் தீக்குளிக்க முயற்சி

15th Jun 2022 03:56 AM

ADVERTISEMENT

காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனைவி, குழந்தையுடன் வந்த ஒருவா், ஆட்சியரக வாயிலில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவரது வீட்டின் அருகே காரைக்கால் காவல் துறையில் பணியாற்றும் ராஜ்மோகன் என்பவா் வசித்து வருகிறாா். காவலா் வீட்டில் அண்மையில் சில பொருள்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த திருட்டில் சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் ராஜ்மோகன் புகாா் அளித்திருந்தாராம்.

இந்நிலையில், சுரேஷ், தனது மனைவி, பெண் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரகப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். மோட்டாா் சைக்கிளில் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து, சுரேஷ் தனது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயற்சித்தாா். அப்போது, ஆட்சியரக வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை தடுத்து அப்புறப்படுத்தினா்.

காரைக்கால் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். காவலா் வீட்டில் நடந்த திருட்டுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, திருடியதாக ஒப்புக்கொள்ளுமாறு காவல் துறையினா் நிா்பந்திக்கிறாா்கள் என அவா் கூறினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை அரசுப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT