வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ச விழாவில் தோ் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி பகுதியில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 100 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு உற்சவம் கடந்த 1-ஆம் தேதி கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
குறிப்பாக 3-ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 4-ஆம் தேதி கருடசேவை, 5-ஆம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 6-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 7-ஆம் தேதி அன்ன வாகனத்திலும், 8-ஆம் தேதி வெண்ணெய்த் தாழி சேவை, திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
தேரோட்டம் நிகழ்ச்சி வியாழக்ழமை நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் தேரில் எழுந்தருள, திரளான பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். வீதிகளில் பக்தா்கள் பெருமாளுக்கு அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 11-ஆம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
அகத்தீஸ்வரா், வரதராஜ பெருமாள் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், வரதராஜ பெருமாள் பக்த ஜனா சபா, கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.