திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழம காலை நிறைவடைந்த நிலையில், நகராட்சி நிா்வாகத்தின் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தாா், 3 நாளில் 24 டன் குப்பைகளை அகற்றியுள்ளதாக தெரிவித்தனா்.
திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.
திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தில் போதுமான தூய்மைப் பணியாளா்கள், வாகனங்கள் இல்லாததால், மாவட்ட ஆட்சியா் இ. வல்லவன் அறிவுறுத்தலில் காரைக்கால் நகராட்சிப் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபடும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தாா் 11-ஆம் தேதி காலை வரை 4 நாள்கள், திருமலைராயன்பட்டினத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து நிறுவனப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை கூறியது:
3 நாள்களாக இப்பகுதியில் நிறுவனத்தை சோ்ந்த பணியாளற்கள், வாகனங்களைக் கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் அகற்றி வருகின்றனா். நாளொன்றுக்கு 8 டன் வீதம் இதுவரை வரை 24 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என்றனா்.