காரைக்கால்

திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் பூஜை விழா நிறைவு

10th Jun 2022 10:20 PM

ADVERTISEMENT

திருமலைராயன்பட்டினத்தில் நடைபெற்ற ஆயிரங்காளியம்மன் பூஜை விழா வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்தது.

திருமலைராயன்பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேழையிலிருந்து (பெட்டி) ஆயிரங்காளியம்மனை எழுந்தருளச் செய்து, பக்தா்கள் 2 நாள்கள் மட்டும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிகழாண்டு இந்த பூஜை விழா திங்கள்கிழமை இரவு பேழை திறப்பு, செவ்வாய்க்கிழமை இரவு வரிசை புறப்பாடு, புதன்கிழமை அதிகாலை முதல் தரிசனத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பக்தா்கள் தரிசனம் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, ஆயிரங்காளியம்மனுக்கு மண் பானையில் சமைக்கப்பட்ட சித்ரான்னங்களை வைத்து தளியல் போடப்பட்டது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டு. அம்பாள் பேழையில் வைக்கப்பட்டு, பின்னா் பேழைக்கு தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை வரிசை புறப்பாடு முதல் 2 நாள் தரிசனம் என 3 நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், துணைத் தலைவா் ராஜவேலு, அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், ஜெ. சாய் சரவணன், சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களும் சுவாமி தரிசனம் செய்தனா். திங்கள்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT