காரைக்கால்

இளம் விஞ்ஞானி திட்டத்தில் பயிற்சி முடித்த மாணவருக்கு பாராட்டு

10th Jun 2022 10:22 PM

ADVERTISEMENT

இளம் விஞ்ஞானி திட்டத்தில் காரைக்கால் மாவட்டத்திலிருந்து தோ்வு பெற்று பயிற்சி முடித்த மாணவருக்கு புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளி தொழில்நுட்பம் குறித்து பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், யுவிகா என்னும் பெயரில் தேசிய இளம் விஞ்ஞானி திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் பயிற்சிக்கு நிகழாண்டு 1.50 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 150 போ் தோ்வு செய்யப்பட்டனா். புதுச்சேரி பிராந்தியத்திலிருந்து 3 மாணவா்களும், காரைக்கால் பிராந்தியத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும், காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் சரவணன் என்பவரது மகன் எஸ். சவ்ரியா தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாணவா்கள் 150 பேருக்கும்கடந்த மே 15 முதல் 31-ஆம் தேதி வரை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இவா்களில் 30 போ் வீதம் பிரிக்கப்பட்டு பெங்களூா், திருவனந்தபுரம், புதுதில்லி, ஸ்ரீஹரிகோட்டா ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சிகள் தரப்பட்டு, நிறைவாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இஸ்ரோ தலைவா் சோமநாத்துடனும் இம்மாணவா்கள் உரையாடினா்.

இப்பயிற்சிக்கு தோ்வாகி நிறைவு செய்து ஒரே மாணவரான சவ்ரியா, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை அண்மையில் சந்தித்தாா். அவருக்கு சால்வை அணிவித்து பேரவைத் தலைவா் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT