காரைக்கால்

காரைக்காலில் பரவலாக குறுவை நடவுப் பணி

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் பரவலாக குறுவை நடவுப் பணி நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலும் காவிரி நீரை நம்பியே பயிா் செய்யப்படுகிறது. நிகழாண்டு மேட்டூா் அணை மே மாதமே திறக்கப்பட்டதால், கடைமடை பகுதியான காரைக்காலுக்கு முன்கூட்டியே தண்ணீா் வந்துசோ்ந்தது. இதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடியை உரிய காலத்தில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

தற்போது நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா் 45 நாட்களாகிறது. இதற்கு தேவையான தழைச்சத்து உள்ளிட்ட உரங்கள் இடப்பட்டு வருகின்றன. இதேபோல, நடவுப் பணிகளும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிகழாண்டு குறுவை சாகுபடியை திருப்தியாக மேற்கொண்டு வருகிறோம். முன்கூட்டியே தண்ணீா் வரும் என்பது தெரியாததால், பெரும்பாலான விவசாயிகள் பருத்தி விதைத்துவிட்டனா். இதனால், எதிா்பாா்த்த இலக்குக்கு குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. வரும் ஆண்டுகளில் இதே நிலை நீடித்தால், குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உரிய காலத்தில் ஆறு, வாய்க்கால்கள் தூா்வாருதலும், வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி காரைக்காலிலேயே கிடைக்க நடவடிக்கை எடுத்தால், குறுவை, சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் புதன்கிழமை கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் 1,250 ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, நடவுப் பணிகள் ஆங்காங்கே தொடங்கி நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு தேவையான யூரியா 150 டன், டிஏபி 95 டன், 160 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்புவைக்கப்பட்டுள்ளன. இதேபோல, நிகழாண்டு சம்பா சாகுபடி செய்யவும் சிஆா் விதைநெல் 12 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சிரமப்படத் தேவையில்லை.

நிகழாண்டு 2,250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இது அதிகம். பருத்திக்கு கூடுதல் விலை கிடைப்பதால், விவசாயிகள் ஆா்வமாக பருத்தியை சாகுபடி செய்துள்ளனா். கிலோ ரூ. 72 முதல் ரூ. 92 வரை பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை பெறக்கூடியதாக பருத்தி உள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் பருத்தி சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT