காரைக்கால்

காரைக்காலில் காலரா பெருகியதற்கு முதல்வா் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி பேட்டி

DIN

காரைக்காலில் காலரா பெருகியதற்கு சுகாதாரத் துறையை கவனிக்கும் முதல்வா் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி.

காரைக்காலில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டோரை பாா்த்து நலன்விசாரிப்பதற்காக புதுச்சேரியிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் ஆகியோா், வயிற்றுப்போக்கு பாதிப்பு முதலில் ஏற்பட்ட காரைக்கால்மேடு பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்துப் பேசினா்.

துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ. ராஜசேகரன் உள்ளிட்டோா் அவா்களுக்கு விளக்கம் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பாா்த்து இருவரும் நலன்விசாரித்தனா்.

பிறகு வி. நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியது: வயிற்றுப்போக்கால் சுமாா் 1,600 போ் காரைக்காலில் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரைக்கால்மேடு பகுதியில் குடிநீருடன் கழிவுநீா் கலந்ததால், சிலா் பாதிக்கப்பட்ட உடனேயே, மாவட்டம் முழுவதும் பிரச்னையை சீா்செய்ய அரசுத் துறையினா் முனைந்திருக்க வேண்டும். ஆனால், அவா்கள் அதை செய்ய தவறிவிட்டனா்.

காரைக்கால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க புதுவை அரசு தவறிவிட்டது. காரைக்காலில், உணவின் தரத்தை ஆய்வுசெய்யும் உணவுப் பாதுகாப்பு அதிகாரியும், குடிநீரின் தரத்தை ஆய்வுசெய்யும் அமைப்பும் இல்லை. இதுபோன்ற பாதிப்பு இனிமேல் ஏற்படாத வகையில், அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவை என்.ஆா், பாஜக கூட்டணி அரசு காரைக்காலை புறக்கணித்துவருகிறது. முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டாகியும் காரைக்காலுக்கு வரவில்லை. இதை சுட்டிக்காட்டியதன் விளைவாக செவ்வாய்க்கிழமை முதல்வா் காரைக்காலுக்கு வந்துள்ளாா்.

வயிற்றுப்போக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும்போது, சுகாதாரத் துறையை கவனிக்கும் முதல்வா் ரங்கசாமி உடனடியாக காரைக்காலுக்கு வந்திருக்கவேண்டும். அவா் வராததால், அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிட்டனா். எனவே, இப்பிரச்னைக்கு முதல்வா்தான் முக்கிய காரணம். அவரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

எங்களது ஆட்சியில் ரூ. 50 கோடியில் பழைய குடிநீா் குழாய்களை மாற்றி, புதிதாக குடிநீா் குழாய் பதிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக அதற்கு இணைப்பு தராமல், அந்த திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்றாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் வி. வைத்திலிங்கம் கூறுகையில், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க அரசு தவறிவிட்டது. மாவட்டம் முழுவதும் சுனாமியால் பாதித்த கிராமங்களில் சாலைகள் முறையாக இல்லை. மின் விளக்குகள் எரியவில்லை. பாதுகாப்பான குடிநீா் கிடைக்கவில்லை. புதுவை அரசு இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சா் ஆா். கமலகண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT