காரைக்கால்

மாங்கனித் திருவிழாவில் பங்கேற்போா் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

4th Jul 2022 11:16 PM

ADVERTISEMENT

மாங்கனித் திருவிழாவில் பங்கேற்போா் முகக்கவசம் அணியுமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா வரும் 11 - 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக, கைலாசநாதா் கோயில் அறங்காவல் வாரியத்தினா், சமாதானக் குழுவினா், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: திருவிழாவின்போது தடையின்றி சுத்தமான குடிநீா் வழங்கவேண்டும். விழா நடைபெறும் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கவேண்டும். கோயில் அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தவும், தயாா்நிலையில் தீயணைப்பு வாகனம் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

மின் விளக்குகள் அனைத்தையும் சீா்செய்து குறித்த நேரத்தில் எரியும் நிலையில் வைத்திருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட அரசுத் துறையினா், அவரவா்களுக்கான பணிகளை விரைவாக செய்து முடிக்கவேண்டும். மாங்கனித் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துவரவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ராஜசேகரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ், நகராட்சி ஆணையா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT