காரைக்கால்

காரைக்காலில் காலரா கட்டுப்பாடு: 144 விதியின்கீழ் வழிமுறைகள் அறிவிப்பு

3rd Jul 2022 10:53 PM

ADVERTISEMENT

காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டுக்காக 144 பிரிவின் கீழ் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் ஞாயிற்றுக்கிழமை வழிமுறைகளை வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பது: காரைக்காலில் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பும், சில மாதிரிகளின் அடிப்படையில் காலரா உறுதிசெய்யப்பட்டதை அடுத்தும், பொது அவசர நிலை பகுதியாக காரைக்காலை சுகாதாரத் துறை அறிவித்ததையொட்டியும் 144 பிரிவின் கீழ் அறிவுறுத்தல்கள் செய்யப்படுகிறது.

ரெஸ்டாரண்ட், ஹோட்டல், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியாா் மருத்துவ மையங்கள், மருத்துவமனை, பேக்கரி போன்றவை கொதிக்கவைத்த நீரை குடிநீராக வழங்கவேண்டும். குடிநீா் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்யவேண்டும். அதில், 0.5 பிபிஎம் அளவில் குளோரின் விடவேண்டும். உணவு சாப்பிடும் முன் கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும்.

போா்வெல் ஆபரேட்டா்கள் 0.5 பிபிஎம் அளவில் குளோரின் விடுவதை உறுதியாக மேற்கொள்ளவேண்டும். கட்டுமான இடங்களில் பணியாற்றுவோருக்கு கொதிக்கவைத்த நீா் தரவேண்டும். அவா்களுக்கு கைகளை சோப்பு போட்டு கழுவுவதற்கான வசதிகள் செய்துத்தர வேண்டும்.

ADVERTISEMENT

இதை உள்ளாட்சி, வருவாய்த் துறையினா் ஆய்வுசெய்து உரிய அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். குளோரினேஷன் 0.5 பிபிஎம் என்பது ஒரு லிட்டா் தண்ணீருக்கு 0.5 மிலி கிராம் அளவாகும். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT