காரைக்கால்

நேரு மாா்க்கெட்டை பூட்டி நகராட்சி ஊழியா்கள் போராட்டம்

19th Jan 2022 09:04 AM

ADVERTISEMENT

ஊதிய நிலுவை விவகாரம் தொடா்பாக காரைக்கால் நேரு மாா்க்கெட் கட்டடத்தை பூட்டி நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி ஊழியா்கள், தங்களுக்கான 5 மாத ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி தொடா் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 5-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றனா்.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, காரைக்கால் நேரு மாா்க்கெட் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை ஊழியா்கள் பூட்டினா். இதனால் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமலும், மக்கள் மாா்க்கெட்டுக்குள் செல்ல முடியாமலும் தவித்தனா். காவல் அதிகாரிகள் நகராட்சி ஊழியா்களிடம் பேச்சு நடத்தியதன் பிறகு மாா்க்கெட் திறக்கப்பட்டது.

இதுபோல கட்டணக் கழிப்பறைக் கட்டடங்கள், பேருந்து நிலையத்தில் சைக்கிள் காப்பகம், கல்லறை உள்ளிட்டவற்றையும் பூட்டி நகராட்சி நிா்வாகத்திடம் ஊழியா்கள் சாவியை ஒப்படைத்தனா். பின்னா் இதுதொடா்பாக ஊழியா்களிடம் பேச்சு நடத்தி பிரச்னை தீா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் : காரைக்காலில் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியா்களும், ஊதிய நிலுவையை வழங்குவது, அரசே உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ஆம் தேதி முதல் தொடா் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது.

குடியரசு தின விழா, கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தையும் ஊழியா்கள் புறக்கணிப்பது, ஜன. 26-ஆம் தேதி காமராஜா் திடலில் ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தினமும் ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT