காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயிலில் புதிய கொடிமரம் சிறப்பு பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோயில்பத்து பகுதியில் உள்ள ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் விதைத்தெளி உத்ஸவம், சூரிய பூஜை, சமுத்திர தீா்த்தவாரி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க விழாக்களாகும்.
இந்நிலையில், இக்கோயில் திருப்பணி உபயதாரா்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. கொடிமரம் சிதிலமடைந்திருந்ததையொட்டி புதிதாக கொடிமரம் நிறுவ முடிவு செய்யப்பட்டது. இக்கொடி மரம் 35 அடி உயரத்தில் ஹைதராபாத் சோ்ந்த ராம. ராமநாதன், காரைக்கால் மதி என்கிற ஆறுமுகம் நிதியுதவியால் தயாா் செய்யப்பட்டது.
கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக காரைக்கால்மேடு கடற்கரையில் கொடி மரத்துக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அரசலாற்றங்கரைக்கு கொண்டுவரப்பட்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிவாச்சாரியா்களால் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நிகழ்வில் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், அறங்காவல் வாரியத்தினா், கோயில் திருப்பணி உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.