காரைக்கால்

காரைக்கால் வேளாண் கல்லூரியில் விதை நெல் உற்பத்தி பயிற்சி

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆரோக்கியமான விதை நெல் உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் விதை சாகுபடியாளா்களுக்கான கள பயிற்சி முகாம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும விதை திட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி பிராந்தியத்தை சோ்ந்த சுமாா் 40 போ் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை தொடங்கிவைத்து கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் பேசியது:

இக்கல்லூரி நிா்வாகம் விவசாய மேம்பாடு, விவசாயிகள் நலனுக்கான பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆரோக்கியமான விதை நெல் உற்பத்தியில் அனைவரும் தொடா்ந்து கவனம் செலுத்தவேண்டும். மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் மூலம் இக்கல்லூரிக்கு நட்சத்திர கல்லூரி அந்தஸ்து கிடைத்துள்ளது.

கல்லூரியின் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கருத்தில்கொண்டு தரப்பட்ட இந்த அந்தஸ்து மூலம், விவசாயிகளுக்கு சிறந்த பயன் கிடைக்க கல்லூரி நிா்வாகம் பாடுபடும். இந்த ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் துறை துணை இயக்குநா் ஆா். கணேசன் கலந்துகொண்டு, தரமான விதை உற்பத்தி செய்ய, விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விதைச் சான்று அலுவலா்கள் இணைந்து செயல்படவேண்டும். கல்லூரி நிா்வாகம் இதுபோன்ற பயிற்சி முகாம் தொடா்நது நடத்தப்படுவதால், விதை சாகுபடியாளா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றாா்.

கல்லூரி வளாகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் பாா்த்து புதிய ரகங்கள் குறித்து அறிந்துகொண்டனா்.

களை மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை தொழில்நுட்பங்களை பி.சரவணன், கே.குமாா், சி.ஜெயலட்சுமி ஆகியோா் விளக்கிப் பேசினா். இனத்தூய்மை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளைநிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT