காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழக கடற்கரையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டமான காரைக்காலில் பரவலாக வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இரவு மழை மேலும் தீவிரமடைந்தது.
இந்தநிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. சில நேரங்களில் மழை ஓய்ந்தும், பின்னா் வலுவான மழையாக இருந்ததால், சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பருவழையின்போது தேங்கிய மழைநீா் அண்மையில் வடிந்த நிலையில், 2 நாள்களாக பெய்யும் தொடா் மழையால் மீண்டும் குடி யிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதுபோல கிராமப்புறங்களில் உள்ள வீடுகளைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளது. மழை காரணமாக வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தமாக இருந்து. தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.