ஆசிரியா்கள் பணியிட மாற்ற விவகாரத்தில் புதுவை அரசைக் கண்டித்து, காரைக்காலில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மக்கள் போராட்டக் குழு சாா்பில், காரைக்கால் மாமா தம்பி மரைக்காயா் வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமை வகித்தாா். துணை ஒருங்கிணைப்பாளா் பொன். பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.
காரைக்காலில் தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியா் பற்றாக்குறை உள்ள நிலையில், புதுவை கல்வித்துறை காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 124 பேரை புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்து ஆணை
பிறப்பித்துள்ளது. காரைக்கால் பிராந்தியத்தில் காலியான 124 பணியிடங்களுக்கு பதிலாக 90 பணியிடங்களுக்கு மட்டுமே ஆசிரியா்களை புதுச்சேரியிலிருந்து பணியிட மாற்றம் செய்து இருப்பது ஏற்புடையதல்ல.
பாடப் புத்தகங்கள் இதுவரை முறையாக வழங்கி முடிக்கவில்லை. இலவச சைக்கிள், ரொட்டி, பால் வழங்கலும் இல்லை. மாணவா் நலனுக்காக இயக்கப்பட்ட ரூ. 1 கட்டணப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் புதுவை கல்வித்துறை செயல்பாடுகள் மாணவா்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியா், போராட்டக் குழு உறுப்பினா்கள், அரசியல் கட்சியினா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.